×

விவசாயிகள், சாமானியர்களின் அவலநிலையை சீராக்க அமைதியில்லா ஆன்மாவாக 100 முறை கூட இருக்க தயார்: பிரதமர் மோடி பேச்சுக்கு சரத்பவார் பதிலடி


புனே: விவசாயிகள், சாமானியர்களின் நிலையை சீராக்க 100 முறை கூட அமைதியில்லா ஆன்மாவாக அலைந்து திரிய நான் தயார் என்று பிரதமர் மோடியின் பேச்சுக்கு சரத்பவார் பதிலடி கொடுத்தார். மகாராஷ்டிராவில் நேற்று முன்தினம் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, தேசியவாத காங்கிரஸ்(எஸ்பி) தலைவர் சரத்பவாரை அலைந்து திரியும் ஆன்மா என்று விமர்சனம் செய்தார். அவர் கூறுகையில்,’ மகாராஷ்டிராவில் ஒரு அலைந்து திரியும் ஆன்மா உள்ளது.

அதற்கு வெற்றி கிடைக்கவில்லை என்றால் அது மற்றவர்களின் நல்ல வேலையை கெடுத்துவிடும். மகாராஷ்டிராவும் கடந்த 45 ஆண்டுகளாக அதற்கு பலியாகிவிட்டது. மகாராஷ்ராவில் அமைதியின்மையை அந்த ஆன்மா ஏற்படுத்தி விட்டது’ என்று சரத்பவார் பெயரை குறிப்பிடாமல் பிரதமர் மோடி விமர்சனம் செய்தார். பிரதமர் மோடியின் பேச்சுக்கு நேற்று சரத்பவார் பதிலடி கொடுத்தார். அவர் கூறியதாவது: 2016ம் ஆண்டு எனது விரலைப் பிடித்தபடி நான் அரசியலுக்கு வந்ததாக பிரதமர் மோடி கூறியிருந்தார்.

இப்போது மோடி மிகவும் தாமதமாக என் மீது கோபமாக இருக்கிறார். மகாராஷ்டிராவில் ஒரு அமைதியற்ற ஆன்மா மாநிலம் முழுவதும் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டியிருக்கிறார். இந்த ஆன்மா அரசிற்கு தடைகளை உருவாக்குவதாகவும் மோடி கூறியிருந்தார். இந்த ஆன்மாவிற்கு எதிராக பாதுகாப்பின் அவசியம் குறித்தும் அவர் பேசினார். இந்த ஆன்மா அமைதியற்றது என்பது சரியானது. ஆனால் சுயத்திற்காக அல்ல.

விவசாயிகள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை எடுத்துரைப்பதற்காக, பணவீக்கத்தால் அவதிப்படும் சாமானியர்களின் அவலத்தை முன்வைக்க நான் அமைதியற்றவனாக இருக்கிறேன். மக்களின் துயரங்களை எடுத்துரைக்க 100 முறை கூட எனது ஆன்மா அமைதியடையாமல் இருக்க தயாராக இருக்கிறேன். இத்தனை ஆண்டுகளில் நான் என்ன செய்தேன் என்று மோடி கேட்டார். இந்த கேள்வியை என்னிடம் கேட்பதற்கு பதில், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பதால் அவர் தான் இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். அவரிடம் ஒரே ஒரு பதில் மட்டுமே உள்ளது. அது மற்றவர்களை விமர்சிப்பது மட்டுமே. இவ்வாறு அவர் பேசினார்.

* ராகுலின் 3 தலைமுறைகள் இந்த நாட்டிற்காக உயிர் தியாகம் செய்துள்ளனர்
சரத்பவார் மேலும் கூறுகையில்,’ ராகுல் காந்தியை இளவரசர் என்று மோடி அழைக்கிறார். ஆனால் ராகுல் காந்தியின் மூன்று தலைமுறைகள் இந்த நாட்டிற்கு சேவை செய்து தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தவர்கள் என்பதை பிரதமர் தெரிந்து கொள்ள வேண்டும். சுதந்திரத்திற்கு முன் ஜவஹர்லால் நேரு 13 ஆண்டுகள் சிறையில் இருந்தார். பின்னர், நாட்டை அனைத்து துறைகளிலும் முன்னெடுத்துச் செல்ல பாடுபட்டு ஜனநாயக ஆட்சியை உறுதி செய்தார்.

ராகுல் காந்தியின் பாட்டி இந்திரா காந்தி வறுமையை ஒழிக்க அயராது பாடுபட்டார். படுகொலை செய்யப்பட்டார். பின்னர் ராகுலின் தந்தை ராஜீவ் காந்தி நவீனமயமாக்கலை ஏற்றுக்கொண்டு அதற்காக உழைத்தார். அவர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். மக்களின் கஷ்டத்தைப் புரிந்து கொள்வதற்காக, நீங்கள் இளவரசர் என்று அழைக்கும் இந்த ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை, காலநிலையை மீறி, பாதயாத்திரையாக பயணம் மேற்கொண்டார். அவரைப் பாராட்டுவதற்குப் பதிலாக, நாட்டின் பிரதமரால் இளவரசர் என்று கேலி செய்யப்படுகிறார்’ என்றார்.

The post விவசாயிகள், சாமானியர்களின் அவலநிலையை சீராக்க அமைதியில்லா ஆன்மாவாக 100 முறை கூட இருக்க தயார்: பிரதமர் மோடி பேச்சுக்கு சரத்பவார் பதிலடி appeared first on Dinakaran.

Tags : Sharad Pawar ,PM Modi ,Pune ,Modi ,Maharashtra ,Nationalist Congress ,SP ,Dinakaran ,
× RELATED மோடியால் விமர்சனத்தை தாங்க முடியாது;...